பெரிய உதடு சேலஞ்ச் (#kylieJenner lipchallenge)
அமெரிக்க டி.வி நடிகை கைலி ஜென்னர் தனது உதடுகளை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெரிதாக்கினார். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என அவர் பழைய - புதிய படங்களைப் போட... அது அவர் பெயரிலேயே பெரிய ட்ரெண்டிங்காக பற்றிக் கொண்டது. ‘பெரிய உதடுகளுக்கு எதற்காக சர்ஜரி?
ஒரு பாட்டிலுக்குள் உதடுகளை நுழைத்து காற்றை உறிஞ்சினாலே நம் உதடு உள்ளே இழுக்கப்பட்டு பெரிதாக வீங்கிப் பழுத்துவிடுமே’ என இளம் பெண்கள் பலர் டெமோ காட்டினார்கள். அப்படி உதட்டைப் புண்ணாக்கி பெரிதாக்கி செல்ஃபி எடுத்து வெளியிடும் ட்ரெண்ட் இன்றுவரை ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டரில் உயிர்த்திருக்கிறது!‘அசிங்கமாவோம் வா’ சேலஞ்ச் (#DontJudgeChallenge)அழகான பொண்ணுங்க காறித் துப்பினா கூட வாரி வாரி லைக் போடுகிற உலகம் இது.
இதில் கடுப்பாகிற முதல் வர்க்கம் சுமார் மூஞ்சி குமாரிகள். இரண்டாவது வர்க்கம், ‘எனக்கு லைக்கே விழல’ எனும் ஆங்கிரி பாய்ஸ். இவர்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய ட்ரெண்ட்தான் இது. அதாவது முடிந்தவரை தங்கள் முகத்தை அசிங்கமாக்கி செல்ஃபி எடுத்துப் போடுவது. முகம் முழுக்க தழும்புகள், கறை படிந்த பற்கள், கொடூர முகச் சுருக்கங்கள் என இந்த ‘அக்ளி மேக்கப்’ அநியாயத்துக்கு மிரட்டும். ‘‘அது என்ன மூஞ்சியப் பார்த்து ஆளை எடை போடுறது?’’ எனக் கொதித்தவர்கள் இதற்கு #DontJudgeChallenge என்றே பெயர் வைத்து பரப்புகிறார்கள். கடந்த ஜூலை மாதம் முதல் பிறப்பெடுத்து பிரவாகம் ஆகியிருக்கிறது இந்த சவால் ட்ரெண்ட்!
தோளுல காசு சேலஞ்ச்! (#collarbone challenge)
இது சீனாவில் துவங்கியது. சீன நடிகை லிவ் ஜியாராங் தனது காலர் போன்... அதாவது நெஞ்சாங்கூட்டின் மேல் தொண்டையில் இருந்து தோள் வரை செல்லுமே அந்த விலா எலும்பில் இருக்கும் பள்ளத்தில் வரிசையாய் உலோக நாணயங்களை அடுக்கி வைத்து ஒரு செல்ஃபி எடுத்தார். அவ்வளவுதான்... ‘காலர் எலும்பில் எத்தனை காயின்களை அடுக்க முடியும்?’ என இதுவே ஒரு போட்டியாகிவிட்டது. கொஞ்சம் பூசின உடம்பென்றால் இந்த விலா எலும்பு கண்ணுக்கே தெரியாது. ஆக, ஒல்லி பெல்லி உடலமைப்பைப் பெற்ற பெண்களுக்கு மட்டுமேயான வீர விளையாட்டு இது. ‘நாங்களும் ஸ்லிம் ஃபிட்டா இருக்கோம்ல’ எனக் காட்டிக் கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து திரளாக பெண்கள் இந்தப் போட்டிக்கு போட்டோ போடுகிறார்கள்!
தொப்புளைத் தொடு சேலஞ்ச்! (#BellyButton Challenge)
அட, தொப்புளைத் தொடமுடியாதா? என அசட்டை ஆகாதீங்க. கையை முதுகுக்குப் பின்னால் சுற்றி தொப்புளைத் தொட வேண்டும். இதுவும் மெல்லிய பெண்களுக்கான போட்டிதான். துவங்கிய இடம் அதே சீனாதான். ‘‘ஏற்கனவே பெண்கள் ஒல்லி உடம்புக்காக சாப்பிடாமல் ஊட்டச்சத்தை இழக்கிறார்கள், இது இது வேறயா?’’ என சமூக ஆர்வலர்களின் கோபத்துக்கு இது ஆளானது. ஆனால், ‘‘இப்படி தொப்புளைத் தொட ஒல்லி உடம்பு தேவையில்லை. தோளின் வளைவுத்தன்மைதான் முக்கியம். அந்த விதத்தில் இது ஜிம்னாஸ்டிக்கை ஊக்குவிக்கிறது’’ என சப்பைக் கட்டு கட்டி சமாளித்துவிட்டார்கள்.
அமுக்கிப்புடி சேலஞ்ச்! (#extremephonepinch)
இப்போதைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் அனைத்திலும் ஹாட் இதுதான். ஆப்பிள் ஐ போன், சாம்சங் எஸ்6 போன்ற காஸ்ட்லி மொபைல்களை இரண்டே விரல்களால் இடுக்கிப் பிடித்தபடி நிற்பது. இதில் என்ன த்ரில் என்கிறீர்களா? உயரிய கட்டிடம், ஆபத்தான மலை விளிம்பு என எங்கிருந்தாவது பள்ளத்தாக்கை நோக்கி அந்த போனை பிடித்திருப்பார்கள். மலையுச்சிதான் என்றில்லை... ஓடும் ஆறு, வீட்டு டாய்லட், தெருக் கால்வாய் என எதன் மீது வேண்டுமானாலும் போனைத் தூக்கிப் பிடிக்கலாம். விட்டால் போச்சு... இதுதான் கான்செப்ட்!
இந்த சேலஞ்ச்கள் தவிர, ‘ஒரு டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரை தண்ணீர் குடிக்காமல் விழுங்க முடியுமா?’ எனும் Cinnamon challenge, ‘ஆறு சால்ட் பிஸ்கட்டுகளை அப்படியே விழுங்கிக் காட்டும்’ Saltine cracker challenge, ‘சுமார் நாலு லிட்டர் பாலை வாந்தி எடுக்காமல் ஒரே மடக்கில் குடித்துக் காட்டும்’ gallon challenge, ‘இரண்டு வாழைப்பழத்தையும் ஒரு டின் ஸ்ப்ரைட்டையும் சீக்கிரத்தில் உள்ளே தள்ளிக் காட்டும்’ Banana Sprite challenge...
இப்படி அள்ள அள்ளக் குறையாமல் வருகின்றன உணவு சவால்கள். இவற்றை முயற்சிக்கும் பலர் மூச்சுத் திணறி ஐ.சி.யூவுக்கு போவதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் இந்த சேலஞ்ச்களுக்கு இளசுகளிடையே மவுசு குறைவதில்லை. யூ டியூபில் மட்டுமே இப்படிப்பட்ட சவால் வீடியோக்கள் 30 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.‘இதுதான் இப்ப ட்ரெண்ட்’ எனச் சொன்னால் எந்த ரிஸ்க்கையும் எடுக்க இளைஞர்கள் தயார்தான் போல!
No comments:
Post a Comment