தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்து கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், தில்லி காவல்துறையைச் சேர்ந்த 5 போலீஸார், சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தோட்டப் பராமரிப்பாளர், 2 அதிகாரிகள் ஆகிய 9 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் 14ஆம் ஆண்டு நினைவு தினம், நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த வீரர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பாஜக எம்.பி. சத்யநாராயண் ஜாட்டியா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மௌன அஞ்சலி: அதன்பின்னர், நாடாளுமன்றத் தாக்குதலின்போது உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment