தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்!

                                           
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.
காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.
தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.
காஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.
அதைத் தொடர்ந்து, 'நானும் ரவுடிதான்', 'ஓ காதல் கண்மணி', 'அனேகன்', 'டிமாண்டி காலனி', 'டார்லிங்', 'மாயா' ஆகிய படங்களும், சோடை போகாமல் ஓடின. 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றி, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தியது.
பெரிய பட்ஜெட் படங்களான கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', 'தூங்காவனம்', விஜயின் 'புலி', சூர்யாவின் 'மாஸு' ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
டோலிவுட்டில் எப்படி?
டோலிவுட் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த, ஆந்திரா பாக்ஸ்ஆபிஸைச் சேர்ந்த ஓம் தீபக், "எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரைப்பட உலகை சுமார் 10 சதவீதம் விரிவடையச் செய்தது.
பாகுபலி, உலகம் முழுக்க சுமார் 600 கோடி ரூபாயை வசூல் செய்ய, கொரட்டலா சிவாவின் 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் சுமார் 200 கோடிகளை அள்ளியது" என்றார்.
சினிமா வர்த்தக ஆய்வாளரான ட்ரிநாத், இத்தகைய படங்களின் வெற்றி தெலுங்குத் திரையுலக மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறது. பாகுபலியின் அனைத்து மொழி டப்பிங் படங்களும் நன்றாக ஓடின. அதன் இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 100 கோடி வசூலித்திருக்கிறது. நல்ல கதைதான் முக்கியம்; மொழி முக்கியமில்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.
'ராஜு காரி காதி', 'சினிமா சூப்பிஸ்தா மாவா', 'குமாரி 21 ஃபீமேல்', 'படாஸ்', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் படங்கள், கதாநாயகர்களைத் தாண்டி, கதையின் நாயகர்களை மையப்படுத்தின.
'ராஜு காரி காதி', 'பலே பலே மகாடிவோ' உள்ளிட்டவை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தன. 'ருத்ரமாதேவி', 'ஜேம்ஸ் பாண்ட்', 'சுப்பிரமணியம் ஃபார் சேல்', 'காஞ்சி' உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும், விநியோகஸ்தர்களுக்கு சிறிய தடையாகவே அமைந்திருந்தன" என்று கூறினார்.
டப்பிங் படங்களான 'ரகுவரன் பி.டெக்.', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7', 'ஜுராசிக் வேர்ல்ட்' ஆகியவை வெற்றி பெற்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரூஸ் லீ: த ஃபைட்டர்', 'அகில்' ஆகியவை பெரும் சோகமாக அமைந்தன.
மலையாளத் திரையுலகம் மலர்ந்ததா?
மலையாளத் திரையுலகம், வணிக ரீதியில் வெற்றி பெற்று, கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 'பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிவாகை சூடின.
12 கோடியில் தயாரிக்கப்பட்ட 'மொய்தீன்', சுமார் 50 கோடியை அள்ளியது. 5 கோடியில் உருவாக்கப்பட்ட 'பிரேமம்' வசூலித்ததோ சுமார் 60 கோடி.
இந்த வருடம் வெளிவந்த சுமார் 100 மலையாள படங்களில், 'மிலி', 'பிக்கெட் 43', 'ஃபைர்மேன்', '100 டேஸ் ஆஃப் லவ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'என்னும் எப்பொழும்', 'பாஸ்கர் த ராஸ்கல்', 'சந்திரனேட்டன் எவிடயா' உள்ளிட்டவை வெற்றியைச் சுவைத்தன.
மலையாளத் திரையுலக விநியோகஸ்தரில் ஒருவரான அரவிந்த் நம்பியார், "ரீமேக் மூலமாகவும் திரையுலகம் சம்பாதித்தது. 'ஒரு வடக்கன் செல்ஃபி' தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது" என்று கூறினார்.
மம்முட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்', தெலுங்கு உரிமையோடு, தயாரிப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பணத்தை வசூலித்திருக்கிறது.
'லைலா ஓ லைலா', 'மரியம் முக்கும்', 'சிறகொடிஞ்ச கனவுகள்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை அளித்துச் சென்றன.
கவனத்தை ஈர்த்த கன்னடத் திரையுலகம்
அனுப் பந்தாரியின் 'ராங்கிதரங்கா' மூலம் ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் தன் கவனத்தை ஈர்த்தது. 88வது அகாடமி விருதுகளில் பட்டியலிடப்பட்ட சுமார் 300 படங்களில் ஒன்றாக 'ராங்கிதரங்கா' வந்தது. விநியோகஸ்தரான ரமேஷ் கவுடா, கன்னட திரையுலகம் குறித்துப் பேசினார்.
'' 'ராங்கிதரங்கா' படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 20 கோடியை வசூலித்திருக்கிறது. இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை முறியடித்திருக்கிறது. ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களிலும் படம் சுமார் ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஓடியது. முதல்முறையாக அமெரிக்காவில் எட்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய கன்னடப் படம் இது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
தர்ஷன் நடித்த 'மிஸ்டர். ஐராவதா படமும்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று வாரங்களில் இப்படம், சுமார் 32 கோடியை வசூலித்தது.
'ரன்னா', 'வஜ்ரகயா', 'ராணா விக்ரமா', 'சித்தார்த்தா' உள்ளிட்ட பெரிய படங்கள், சுமாராக ஓடி, போட்ட முதலீட்டை எடுத்திருக்கின்றன. கன்னட உலகைப் பொருத்த வரை, இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் வெற்றி பெற்றது குறைவே.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages