சல்மான் கானுக்கு வயது 50: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து
ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் கான் ஞாயிற்றுக்கிழமை தனது 50-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அவருக்கு நடிகர்கள் அனில் கபூர், சூரஜ் பஞ்சோலி, நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனாலி பிந்த்ரே, சோனாக்ஷி சின்ஹா, சன்னி லியோன், சோனம் கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோகர், இயக்குநர் நிகில் அத்வானி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அனில் கபூர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "சல்மான் கான் 100 வயது வரை வாழ வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சோனம் கபூர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "சல்மான் கான் 50 வயது நபர் போலத் தெரியவில்லை. 27 வயது இளைஞர் போலத் தெரிகிறார். மிகவும் அழகானவர் அவர்' என்று தெரிவித்துள்ளார்.
27 வயது போல உணர்கிறேன்-சல்மான்: 50-ஆவது பிறந்த நாளையொட்டி, பிடிஐ செய்தியாளரிடம் சல்மான் கான் பேசுகையில், "வயதாவது குறித்து நான் கவலைப்படவில்லை. தற்போது எனக்கு 27 வயது ஆவது போலத்தான் உணர்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
சல்மான் கானின் தந்தை, பிரபல எழுத்தாளர் சலீம் கான் ஆவார். சல்மான் கானின் முதல் படம், "பீவி ஹோ தோ ஐஸி' ஆகும். அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ஹிந்தி திரையுலகில் அண்மைக்காலமாக தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்து, ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக சல்மான் கான் வலம் வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டில் குடித்துவிட்டு அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் இருந்து, சல்மான் கானை மும்பை உயர்நீதிமன்றம் அண்மையில்தான் விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment