பீப் ஒலி எதுக்கும்மா.. மகள் கேட்டால் என்ன சொல்வேன்?- வேதனைப்படும் பெண்கள் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 22 December 2015

பீப் ஒலி எதுக்கும்மா.. மகள் கேட்டால் என்ன சொல்வேன்?- வேதனைப்படும் பெண்கள்

சர்ச்சை பாடலுக்கு எதிர்ப்பு

*
சிம்பு எழுதி, பாடி, அனிருத் இசையில் இணையதளத்தில் வெளியான ‘பீப்’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இப்பாடலுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
* ஜெ.பிஸ்மி, சினிமா பத்திரிகையாளர்
நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் உள்ள பலரும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை அவர்கள் நடித்த படங்களில் காட்சிப்படுத்தியவர்கள். திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான செயல்களை கட்டுப்படுத்த இவர்கள் விதிமுறைகளை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தணிக்கை வாரியம் தன் கடமையை செய்தாலே, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை பெருமளவு தடுக்க முடியும். இதில் சமூகத்துக்கும் மிகப் பெரிய கடமை இருக்கிறது. ‘அடிடா அவளை.. வெட்றா அவளை’ என பாடல்கள் வந்தபோதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இதுபோன்ற மிக மோசமான பாடல்கள் வந்திருக்காது.
* கே.மணிமேகலை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
வியாபாரத்துக்காக, பரபரப்புக்காக பெண்களை கேவலமாக சித்தரிக்கும் காட்சிகள், பாடல்கள், வசனங்கள் திரைப்படங்களில் அதிகரித்துள்ளன. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக சமூகத்தை சீரழித்துவிடக் கூடாது. சினிமா, பாடல், வசனம், நாடகம் ஆகியவை மக்களை கவரும் சக்திவாய்ந்த ஊடகம். அத்துறையில் இருப்பவர்கள் இதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டின் மிகப்பெரும் பலமான குடும்ப அமைப்பையும், பெற்றோர், பெரியோர்களையும் இழிவுபடுத்தும் காட்சிகளையும் தடுக்க வேண்டும். தொலைக்காட்சி, ஆடியோ, வீடியோ ஆல்பத்துக்கும் தணிக்கையை அமல்படுத்த வேண்டும்.
* கார்த்தி, பெருந்துறை
தனக்கு ஏராளமான ரசிகைகள் இருப்பதாக நடிகர் சிம்பு பெருமையோடும், உற்சாகத்தோடும் கூறுவார். அவர்களை அவமதிப்பதுபோல இப்படி ஒரு பாடலை ஏன் உருவாக்கினார்? சினிமாவில் இடம்பெறும் ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள், பாடல் வரிகளை தவிர்க்க நடிகர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
* கண்ணன், சூரம்பட்டி, ஈரோடு
சிம்பு பாடல் வரிகள் கண்டிக்கத்தக்கது என்றாலும், அப்பாடல் வெளியிடப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நடிகர் சங்கம் மட்டுமல்லாது திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, அரசின் தணிக்கை வாரியம் போல ஒரு குழுவை அமைத்து, தங்களது அனைத்து படைப்புகளையும் முதலில் சுய தணிக்கை செய்துகொள்வது சமுதாயத்துக்கு நன்மை பயக்கும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையும் எழுதலாம், வெளியிடலாம் என்று நினைப்பவர்களுக்கு தற்போதைய எதிர்ப்பு பாடம் புகட்டியுள்ளது.
* எழுத்தாளர் நாறும்பூநாதன், திருநெல்வேலி
பல திரைப்படங்களில் பெண்களை நுகர்வுபொருளாக சித்தரிப்பதும், அவர்களை கேலி செய்வதுமாக காட்டுகிறார்கள். பெண்களை மதித்து எழுதாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை கேவலப்படுத்தாமல் இருப்பது அவசியம். கடந்த காலங்களிலும் இதுபோன்ற சர்ச்சைகள் சில நேரம் எழுந்தன. ‘பீப்’ பாடலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருப்பதும், கலைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது. பெண்களுக்கு மரியாதை, கண்ணியம் தரும் படைப்புகளுக்கு திரையுலகம் முக்கியத்துவம் தரவேண்டும்.
* ராஜேஷ், எலெக்ட்ரீஷியன், நாகர்கோவில்
பிரிக்க முடியாதது தமிழகமும், சினிமாவும். நம்மை ஆட்சி செய்தவர்களில் பலர் திரைத் துறையில் இருந்து வந்தவர்கள். ஆகவே, திரைத் துறையினருக்கு சமூகப் பொறுப்பு கட்டாயம் இருக்கவேண்டும். நடிகர் சிம்புவும், அனிருத்தும் அவர்களது குடும்பத்தினர், குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் இந்த பாடலை பாடுவார்களா? அதைக் கேட்கும் குடும்பத்தினர், இவர்களை அள்ளிக் கொஞ்சுவார்களா? நடிகர்களை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடி மகிழும் தமிழக மக்களுக்கு இதுதான் அவர்கள் செய்யும் நன்றிக் கடனா? இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, திரைத்துறையில் அனுபவம் மிக்க ஆளுமைகளைக் கொண்டு, வளரும் கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.
* ஜெப்ரி, காமராஜர் பல்கலை. கல்லூரி மாணவர்
ஏதோ சிம்புவின் பாடலில் மட்டுமே பெண்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது போலவும், இனி இப்படி ஒரு சங்கடமான சூழல் உருவாகக்கூடாது எனவும் நடிகர் சங்கம் அறிக்கை விட்டுள்ளது. இது நடிகர் சங்க தேர்தலில் சிம்பு தங்களை எதிர்த்தார் என்பதற்காக விட்ட அறிக்கைபோல உள்ளது. பல சினிமாக்களில் காட்சிகள், பாடல்கள், காமெடிகள் இப்படித்தான் இருக்கின்றன. இனிமேல் காட்சி, பாடல், வசனம் என எந்த வடிவிலும் திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்துவதில்லை என்பதில் நடிகர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
* செல்வி, இல்லத்தரசி, மதுரை புதூர்
பெண்களை கொச்சைப்படுத்தியே பெரும்பாலான திரைப்படங்கள் வருவதால், திரையரங்குக்கு வந்து பெண்கள் படம் பார்ப்பதே குறைந்துவிட்டது. நடிகர் சங்கம் அறிக்கை விட்டதோடு நின்றுவிடாமல் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள், பாடல்கள் வராமல் இருக்க விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உமாமகேஸ்வரி, எல்ஐசி ஊழியர், கோவை
பல படங்களில் பெண்ணை ஆபாசமாக உடல்சார்ந்து பார்ப்பதும், இரட்டை அர்த்தத்தோடு வர்ணிப்பதும்தான் கதாநாயகனின் வேலை என்று ஆகிவிட்டது. உண்மையில் வில்லனுக்குகூட அப்படிப்பட்ட காட்சிகள் இருப்பது இல்லை. இதனால், கதாநாயகர்களைப் பார்த்து பின்பற்றும் இளைய தலைமுறையே கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ‘எதற்காக இந்த பாட்டில் ‘பீப்’ ஒலி சேர்க்கிறார்கள்?’ என்று என் பெண் குழந்தை கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? எவ்வளவு கொடுமை! இனிமேல் இப்படிப்பட்ட பாடல் வரிகள் வராதவாறு ஒட்டுமொத்த திரையுலகமும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஞானகவுரி, சேலம் மாவட்ட மாதர் சங்க தலைவர்
இன்னமும்கூட சிம்புவும், அனிருத்தும் தவறை உணராமல், அதில் இருந்து தப்பிக்கவே நினைக்கின்றனர். சமூகத்தின் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத இவர்களை சினிமா துறையினரும், பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும். நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சிம்புவை நீக்க வேண்டும். நடிகர் சங்கத்தில் இருந்தும், சினிமா துறையில் இருந்து இவர்கள் இருவரையும் விலக்கி வைக்க வேண்டும். 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க, இசையமைக்க தடை விதிக்க வேண்டும்.
* குட்டிமணி, திருச்சி
‘பீப்’ பாடல் தவறான முன்னுதாரணம்தான். எனினும் அதற்காக இவ்வளவு பெரிய போராட் டங்கள் அவசியமில்லை. பாடல்கள், வசனங்களில் இதற்கு முன்பு ஆபாச வார்த்தைகளே இருந்ததில்லையா! இப்பிரச்னையில் வேறு ஏதோ அரசியல் இருப்பதுபோல தோன்றுகிறது.
* தினேஷ், திருச்சி
‘பீப்’ பாடலை பாடியதன் மூலம் சிம்புவின் சிந்தனை, எண்ண ஓட்டம் எப்படிப்பட்டது என தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்துவிட்டது. இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில், அடுத்தவர் மனம் புண்படும்படியான செயல்களை செய்யக்கூடிய அனைவருக்கும் இது ஒரு பாடம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages