சிவகார்த்திகேயன், அனிருத் வளர்ச்சி:
தனுஷ் பெருமிதம்
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட போது, களப்பணி ஆற்றிய நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். தன்னுடைய நண்பர்கள் வைத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள், நண்பர்களிடம் இருந்து வந்த பொருட்களை பகிர்ந்தார். அதுமட்டுமன்றி சமூக வலைத்தளத்தில் எந்த இடத்துக்கு என்ன பொருள் வேண்டும் எனக் கேட்டு அனுப்பிவைத்தார்.
சென்னை மீண்டு பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருக்கும் 'தங்கமகன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருந்த தனுஷிடம் பேசியதில் இருந்து..
'தங்கமகன்' படத்தைப் பற்றி..
2006ம் ஆண்டு முதலே முந்தைய படத்துக்கும், அடுத்த படத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு இருக்கிறேன். 'மாரி'க்குப் பிறகு வரும் 'தங்கமகன்' முற்றிலும் வித்தியாசமான படம். இதுவரை சொல்லாத கதை என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன். நீங்கள் பார்த்த, உங்கள் குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு பண்ணியிருக்கிறோம். அவ்வளவு தான்.
ட்ரெய்லரில் என்ன பார்த்தீர்களோ அது தான் படம். 'வேலையில்லா பட்டதாரி' படக்குழு என்றவுடன் அதன் இரண்டாம் பாகம் என்றார்கள். கண்டிப்பாக 'வேலையில்லா பட்டதாரி'க்கும் 'தங்கமகன்'க்கும் சம்பந்தம் கிடையாது. தற்போது அனைத்து மக்களும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கான படமாக கண்டிப்பாக 'தங்கமகன்' இருக்கும்.
தொடர்ச்சியாக ரஜினி படத்தின் பெயர் கொண்ட படங்களிலேயே நடிக்கிறீர்களே..
'படிக்காதவன்' படத்துக்குப் பிறகு அப்படி நடக்கவில்லையே. இப்படத்துக்கு முதலில் 'தமிழ் மகன்' என்று தான் பெயர் வைத்தோம். எனது பாத்திரத்தின் பெயர் தமிழ் என்பதால் சரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், தயாரிப்பாளர் தான் 'தங்கமகன்' வைத்தால் சரியாக இருக்கும் என்றார், உடனே மாற்றினோம். தயாரிப்பாளரின் ஆசையை நிறைவேற்று தானே ஒவ்வொரு படக்குழுவின் கடமை.
வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததின் காரணத்தை அடைந்து விட்டீர்களா..
'காதல் கொண்டேன்' படத்தின் கதையை எனது அண்ணன் நிறைய நடிகர்களிடம் சொன்னார். யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. 'துள்ளுவதோ இளமை' நேரத்தில் என்னிடம் கூறினார். அப்போது மிகுந்த வருத்தமாக "அனைவருக்குமே முதல் வாய்ப்பு என்பது தான் மிகவும் கடினம். ஒரு காலத்தில் நாம் இருவரும் பெரிய ஆளாகி விட்டோம் என்றால், நாம் புதிதாக வருபவர்களுக்கு உதவ வேண்டும்" என்று தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகளை நான் தயாரிக்கும் படங்களில் பின்பற்றி வருகிறேன். ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு அறிமுகம் கண்டிப்பாக இருக்கும்.
இப்போது 'தங்கமகன்' படத்தில் ஒளிப்பதிவாளர் அறிமுகம் தான். புதியவர்களை உற்சாகப்படுத்தி அறிமுகப்படுத்தும் ஒரு பாலமாக வுண்டர்பார் நிறுவனம் எப்போதுமே இருக்கும்.
சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் உங்களது நிறுவனத்தில் எப்போது படம் தயாரிக்க இருக்கிறீர்கள்..
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு எனது நிறுவனம் இன்னும் வளரவில்லை. தப்பாக நினைக்காதீர்கள். அவருக்கு நல்ல அடித்தளம் அமைத்து தந்ததில் பெருமைப்படுகிறேன். அவர் இப்போது பெரிய இடத்துக்கு சென்று விட்டார் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. எனது நிறுவனத்தில் 30 கோடி, 40 கோடி படங்கள் தயாரிக்கவில்லை. சிறு பட்ஜெட்டில் மட்டுமே படங்களைத் தயாரித்து வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு கூட இணைந்து கிரிக்கெட் விளையாடினோம். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. விஜய் சேதுபதியை வைத்து அடுத்து படம் தயாரிக்க இருக்கிறேன் என்றவுடன் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக அவரை வளர்த்துவிடுகிறேன் என்று நினைப்பது தவறு. சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி இருவருக்கும் இடையே போட்டியே இல்லை.
'நானும் ரவுடிதான்' பட சமயத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவியதே..
'நானும் ரவுடிதான்' திரைப்படம் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபகரமான படம் தான். எனக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் நன்றாக இருக்கவேண்டும் என அவரும், அவர் நன்றாக இருக்கவேண்டும் என நானும் நினைக்கிறோம். மற்றபடி, படத்தின் பட்ஜெட் குறித்து இறுதி நேரத்தில் சிறு சிறு பிரச்சினை நிலவியது உண்மை தான். அவை அனைத்துமே படம் வெளியானவுடன் சரியாகிவிட்டது. படம் வெளியாகும் போது நான் மும்பையில் இருந்ததால், விக்னேஷ் சிவன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவ்வளவு தான். மற்றபடி எனக்கு எந்தவொரு விஷயமும் தெரியாது.
தொடர்ச்சியாக நீங்கள் தயாரிக்கும், நடிக்கும் படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைக்கிறாரே..
கிட்டதட்ட அனிருத் நான் தூக்கி வளர்த்த பையன் மாதிரி. எனக்கும் அவருக்கும் இடையே நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. அதற்காக, நான் மற்ற இசையமைப்பாளர்களோடு பணியாற்ற மாட்டேன் என்று நினைப்பது தவறு. பிரபுசாலமன் இயக்கத்தில் நான் நடித்திருக்கும் படத்துக்கு இமான் தான் இசையமைத்திருக்கிறார். எனக்கு அனைத்து இசையமைப்பாளர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தான்.
இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று குறிப்பிடுகிறீர்களே தவிர மாமனார் என்று குறிப்பிடுவதில்லையே. ஏன்?
நான் முதலில் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். எனக்கு அவர் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான்.
அடுத்து நீங்கள் நடிக்கும், தயாரிக்கும் படங்கள் என்ன?
அடுத்ததாக துரை.செந்தில்குமார் இயக்கத்தில் த்ரிஷா, ஷாமினி, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஆகியரோடு ஒரு படம் நடிக்கிறேன். அப்படத்துக்கு 'கொடி' என்று பணியாற்றும் தலைப்பு வைத்திருக்கிறோம். இன்னும் அத்தலைப்பு இறுதிசெய்யப்படவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை'யில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஓர் இந்திப் படம் நடிக்கிறேன். இவ்வளவு தான் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற படங்கள் அனைத்துமே பேசி வருகிறேன் அவ்வளவு தான்.
தயாரிப்பில் அமலாபால், ரேவதி நடிப்பில் அஸ்வினி ஐயர் இயக்கும் ஓர் இந்தி பட ரீமேக்கை தயாரிக்கிறேன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறேன். மேலும், எனது நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் 'விசாரணை' ஜனவரி இறுதியில் வெளியாக இருக்கிறது.
No comments:
Post a Comment