கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்!
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை வடராட்சிக் கிழக்கு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை, வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி அமைப்பு, வடமராட்சிக் கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட து அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
மருதங்கேணி, தாளையடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படவுள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையினால் பிரதேசத்தின் மீன்பிடித்தொழில் பாதிக்கும் நிலை காணப்படுவதால், குறித்த திட்டத்தை கைவிடக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆயுத மோதல்கள், சுனாமி உள்ளிட்டவற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சிக் கிழக்கின் உள்ளக அபிவிருத்தி தொடர்பில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் போதிய கவனம் செலுத்தாத நிலையில், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினூடு வாழ்வாதாரத்தை முடக்கும் சூழ்நிலையொன்று உருவாக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இரணைமடு குடிநீர் திட்டத்தினை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தடுத்த நிறுத்திய அரசியல்வாதிகள், இப்போது வடமராட்சிக் கிழக்கு மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை முன்னெடுக்க முனைவதாகவும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடற்பாறைகளற்ற வடமராட்சிக் கிழக்கின் கடற்பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினால் கரையோர மீன்பிடி பாதிக்கப்படுவதுடன், கடலரிப்பு ஏற்பட்டும் அபாயமும் காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment