பிரேமம்: காதலை காதலோடு பேசுதல்!
காதலை காதலோடு பேசும் படங்களின் வெற்றியை இரு தரப்பு ரசிகர்கள் பெரும்பாலும் தீர்மானிக்கின்றார்கள். முதலாவது தரப்பு, எப்போதுமே காதல் வரம் பெற்றவர்களாக காதலோடு வலம் வருகின்றவர்கள். அவர்களின் கடந்தகால- நிகழ்கால காதல்களை நினைவூட்டி சிலிர்ப்பான மனநிலைக்குள் தள்ளுவதனூடு அவர்களை படத்தினைக் கொண்டாட வைக்க முடியும்.
இரண்டாவது தரப்பு, என்றைக்குமே காதலெனும் அற்புதம் வாய்க்காதவர்கள். அவர்களின் காதல் கனவினை படத்தின் கதாபாத்திரங்களினூடு பொருத்திக் கொள்ள தூண்டி குஷிப்படுத்துவனூடு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் தரப்புக்குள் இழுக்கின்றார்கள்.
சேரனின் ஆட்டோகிராப்பும், கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயும் இந்த இரு தரப்பு ரசிகர்களினாலேயே அதிகமாக கொண்டாடவும், வெற்றிபெறவும் வைக்கப்பட்டது. அப்படிப்பட்ட படமொன்று கேரளாவில் வெளியாகி மொழிகள், மாநிலங்கள், நாடுகள் கடந்து சக்கைபோடு போட்டிருக்கின்றது. இன்னமும் சிலாகிக்கப்படுகின்றது.
அல்போன்ஸ் புத்ரனின் ‘பிரேமம்’ தான் காதலை கனவோடும் காதலோடும் பேசியிருக்கின்ற அந்தப் படம். படத்தின் முதலாவது காட்சியில் தொற்றிக் கொள்ளும் குதூகலம், காதலாக கனவாக கிளர்ச்சியாக துன்பமாக இன்பமாக இறுதிவரை தொடர்கின்றது. அதுவும், ‘மலர் மிஸ்’ பாத்திரப் படைப்பு பிரேமத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கின்றது.
தனித்துவமான ஆளுமையோடு படைக்கப்பட்டிருக்கின்ற மலர் மிஸ் பாத்திரம் மலையாள சூழலில் தமிழ் பெண்ணாக ரொம்பவும் கவர்கின்றார். கண்களினூடு காதல் பேசும் இடங்களும், ஒவ்வொரு புன்னகையின் போதும் இதயங்களை நொருக்கச் செய்யும் அபாரமும்…. அடடா அவ்வளவு அழகு. சாய் பல்லவி என்கிற புதுமுக நடிகை மலர் மிஸ் பாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக பொருத்திப் போயிருக்கின்றார்.
நவின், தட்டத்தின் மறயத்தில் ஆரம்பித்து பிரேமம் வரை ஹிட்டடிக்கும் மலையாளத்தின் புதிய நாயகன். சினிமா நடிகர் எனும் தோரணை கொஞ்சமும் ஒட்டாத உடல்மொழிலும், இயல்பும் தான் அவரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் அதிக பங்கு வகிக்கின்றது. மூன்று பெண்களைக் காதலிக்கும் போதும், அவர் அதில் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு அபரிமிதமானது. பெரும்பாலான ஆண்களின் பிரதிநிதியாக தெரிகின்றார்.
மலையாளப் படம், மொழி புரியாது என்றெல்லாம் தவிர்க்க வேண்டிய படமில்லை. நல்ல காதலை, அழகாகவும், நல்லிசையோடும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். படம் பார்த்து முடிக்கின்ற போது எமக்கும் காதல் நிரம்பியிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். அதிகமானவர்களுக்கு மலர் மிஸ் மீது காதலும் வந்திருக்கும்!
No comments:
Post a Comment