மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 16 October 2015

மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள்

நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்கு ஆதரவாக இருக்கும், பிரதான நடிகர்களை, தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் நடிகர் ராதாரவி களம் இறங்கி உள்ளார்.

விஷால் அணியில் உள்ளவர்களிடம், 10 கேள்விகளை முன் வைத்து, உருக்கமாக பேசி வருகிறார். விஷால் அணிக்கு ஆதரவாக செயல்படும் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவாவை நட்சத்திர ஓட்டலில் சந்தித்துள்ளார்; நடுநிலை வகிக்கும் நடிகர்கள் தனுஷ், விக்ரம் பிரபுவையும் சந்தித்ததாகத் தெரிகிறது.அவர்களிடம், ராதாரவி முன் வைத்த பத்து கேள்விகள்:

* நடிகர் சங்கத்தில் உங்களுக்கு என, தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததா?
* அந்த பிரச்னைகளை, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தீர்த்து வைக்காமல் இருந்தாரா?
* நடிகர் சங்க பொறுப்புக்கு விஷால் அணியினர் வருவதால், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன நன்மை?
* விஷால் அணியின் பின்னணியில் இருப்பது, நடிகர் சிவக்குமார் குடும்பமே. அந்தக் குடும்பத்தின் பின்னணியில் இருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை தன் அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளார். நாளை, அவர்கள் அணி வெற்றி பெற்றதும், உங்கள் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க இடைஞ்சல் வந்தால், பிரச்னையை தீர்ப்பவர் யார்?
* பிரதானமான பல பைனான்சியர்கள், விஷால் அணியினர் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள், உங்கள் படங்களுக்கு, 'பைனான்ஸ்' செய்ய முரண்டு பிடித்தால், அந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வீர்கள்?
* பருத்தி வீரன், மவுனம் பேசியதே படங்கள் மூலம் தான், நடிகர்கள் சூர்யா, கார்த்தி முன்னணிக்கு வந்தனர்; அதன் பின்னணியில் இருந்தவர், இயக்குனர் அமீர். அவர் இன்று படம் இல்லாமல் தவிக்கிறார்; அவரை, இவர்கள் கைத்துாக்கிவிட மனமில்லாமல் போனது ஏன்?
* சூர்யா நடித்த, அஞ்சான் படம் படுதோல்வி அடைந்தது. நிறைய பணத்தை செலவு செய்து சிக்கலில் இருக்கும், இயக்குனர் - தயாரிப்பாளர் லிங்குசாமியை, சூர்யா கை துாக்கி விடுவாரா?
* அந்த படத்தால் ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்ட சூர்யா முயற்சி எடுத்தாரா?
* குறைந்தபட்சம், அடுத்த படத்துக்கு, 'கால்ஷீட்' கொடுத்தாரா?
* நடிகர் கமல்ஹாசனின், உத்தம வில்லன் படம் தோல்வியடைந்து விட்ட நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்தார்?

இந்த கேள்விகளுக்கு உங்களிடம் உரிய பதில் இருந்தால், நானும், சரத்குமாரும், விஷால் அணியினரை ஆதரிக்க தயார் என, ராதாரவி கூறியுள்ளார். அத்துடன், விஷால் அணி நடிகர், நடிகையரை சந்திக்கச் செல்லும் போது, நடிகர் சங்க கட்டடம் தொடர்பான ஒப்பந்தங்கள், பொதுக்குழு தீர்மானங்கள் போன்ற ஆவணங்களையும் ராதாரவி கையோடு எடுத்து செல்கிறார்.
அதே நேரத்தில், ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஷால் தலைமையில் செயல்படும், 'பாண்டவர் அணி'யினர் முன் வைக்கும் எதிர் கேள்விகள்:
* நடிகர் சங்க கட்டடம் தொடர்பான வழக்கில், ஐந்து ஆண்டுகளாக தடை உள்ளது; அந்த தடையை உடைக்காதது ஏன்?
* நடிகர் சங்க பொதுச் செயலர் ராதா ரவி, சட்டம் பயின்றவர்; இது அவருக்கு தெரியாதா?
* பாண்டவர் அணி சார்பில், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், 1,500 பேர் பங்கேற்றனர். காலையில், 600 பேருக்கு டிபன்; மதியம், 1,200 பேருக்கு சைவ உணவு; மாலை, 800 பேருக்கு டிபன்; மேடை அலங்காரம்; அழைப்பிதழ் அச்சடித்தல் என, பல வகையிலும் செலவு ஏற்பட்டது.
ஆனால், நடிகர் சங்கம் சார்பில், ஒரு சிறிய இடத்தில், சிறிய அளவிலான, 'ஷாமியானா' போட்டு, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாங்கள் நடத்திய ஆலோசனை கூட்ட செலவு, உண்ணாவிரத போராட்ட செலவை விட மிகவும் குறைவு. எனவே, சரத்குமார் அணிக்கு, நிதி நிர்வாகம் மற்றும் நிதி ஆளுமை திறமை இல்லை என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகம், பல கோடி ரூபாய் புரளும் விஷயமாக இருக்கும்போது, சரத்குமார் அணியால், எப்படி திறம்பட அதை கையாள முடியும்?
* தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு மேலாக, சரத்குமாரும், ராதாரவியும் சங்க பொறுப்பில் உள்ளதால், சங்கமே தங்களுக்கு சொந்தம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டதா?
* நடிகர் சங்கத்தில், 3,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பங்கேற்கும் தேர்தலை, விசாலமான இடத்தில் நடத்த வேண்டும் என்ற சாதாரண விஷயம், அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்; இதுவும், நிர்வாக திறமையின்மை தானே?
* தொடர்ந்து, 15 ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பவர்கள், சரியான வாக்காளர் பட்டியலை தயார் செய்து வைக்காதது ஏன்?
* சங்கத்தின் கீழ் நிலை உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், சங்கத்தை விட்டு நீக்கி விடுவதும், சற்று பிரபலமான நபர் என்றால், கீழ்தரமாக பேசி வெளியே அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டது ஏன்?
* நடிகர் சங்க இடம் தொடர்பான ஆவணங்கள் இத்தனை நாட்களும் எங்கே இருந்தன. நீதிமன்றத்தில் ஏன், தாய் ஆவணங்களை சமர்பிக்கவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், ஆவணங்களை சமர்பிக்காதது ஏன்?
* பத்திரிகையாளர்களிடம் ஆவணங்களை காட்டிய சரத்குமார், அதன் நகல்களை ஏன் அவர்களிடம் கொடுக்கவில்லை?
* சங்க உறுப்பினர்களுக்கு செய்த நல்ல விஷயங்களை எடுத்து கூறி பிரசாரம் செய்யாமல், தனி நபர் விமர்சனம் செய்வது ஏன்?
இவ்வாறு பாண்டவர் அணியின் கேள்விகள் அமைந்துள்ளன.

மூன்று ஒப்பந்தங்கள்: நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், தனியார் நிறுவனம் கட்டடம் கட்டுவது தொடர்பாக மூன்று ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். பல பக்கங்கள் உடைய அந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்தால் தான், உண்மை தெரியும். அந்த ஒப்பந்த விவரங்களை கேட்டோம்; சரத்குமார் தரவில்லை. இப்போது, அதை பத்திரிகையாளர்கள் முன், காட்டுகிறார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், மூத்த கலைஞர்கள் சிரமப்பட்டு வாங்கிய நடிகர் சங்க இடம் மட்டுமின்றி, நடிகர் சங்கமே அடையாளமே இல்லாமல் போய் விடும்.
- நடிகர் நாசர்

தமிழர் தான் வேண்டும்!: அண்டை மாநிலங்களில், ஒரு தமிழராவது ஏதாவது ஒரு பொறுப்பில் உள்ளனரா? வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், பிற மாநிலத்தவர்கள் தொழில் செய்யலாம்; சகோதரத்துவத்தோடு, கலாச்சார வேறுபாடின்றி ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழர் அல்லாதவர்கள் தலைமை மற்றும் நிர்வாகிகள் பதவிக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓட்டு போடும் முன் நடிகர்கள் சிந்தித்து சுயமாக செயல்பட வேண்டும்.

- இயக்குனர் பாரதிராஜா

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages