விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த படமாக தயாரிக்கப்பட்டிருக்கும் மார்ஷியன் படத்தை ரிட்லி ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெளியான அண்டி வெயர் என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாட் டாமன், ஜெசிகா, கிரிஸ்டன் விக்ஸ், ஜெப் டானியல்ஸ், கேட் மேரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’, திறன்வாய்ந்த விஞ்ஞானிகளை அனுப்பிவைக்கிறது. ‘ஆர்ஸ் 3’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த குழுவில், படத்தின் நாயகனான மாட் டாமனும் இருக்கிறார்.
எதிர்பாராத விதமாக செவ்வாய் கிரகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதில் மாட் டாமன் சிக்கி உயிரிழந்துவிட்டதாக பிற குழுவினர் கருதுகின்றனர். இந்நிலையில், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புகின்றனர்.
ஆனால், செவ்வாய் கிரகத்தில் தனியாக விடப்பட்ட மாட் உயிரோடு இருக்கிறார். உயிர் வாழ சரியான சாத்தியக்கூறுகள் இல்லாத ஒரு கிரகத்தில் தனியாக இருக்கும் மாட், நாசாவை தொடர்பு கொள்ள முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.
ஒரு கட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் அவரது சக ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட ஒரு செயற்கை சுற்றுச்சூழலில் உணவு பயிரிடுகிறார். மேலும், அடுத்த முறை செவ்வாய்க்கு வரவிருக்கும் விஞ்ஞானிகளை தொடர்புகொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் செயற்கைக்கோள் படங்களின் மூலம் மாட் உயிரோடு தான் இருக்கிறார் என நாசா தெரிந்துகொள்கிறது. ஆனால், மாட்-டை மீட்பதில் குழப்பம் ஏற்படுகிறது. மாட் செவ்வாயில் உயிர் பிழைத்தாரா? பூமிக்கு திரும்பினாரா? என்பதை இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரிட்லி ஸ்காட் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் ஒரு அறிவியல் சார்ந்த கதையை படமாக்கியுள்ளார்.
வேறு ஒரு கிரகத்தில் உயிர் வாழ எந்த சூழலும் இல்லாத நிலையிலும் கூட நாயகன் தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.
படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறன்வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப துறையை சார்ந்த ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘மார்ஷியன்’ மாஸ்.

No comments:
Post a Comment