வெள்ளம் பாதித்த 3 கிராமங்களை தத்தெடுக்கிறார் நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக 3 கிராமங்கள்
தத்தெடுக்கப்படவுள்ளன. சமீபத்திய மழையால் பாதிக்கப்பட்ட இந்த கிராமங்களில்
நிவாரண நடவடிக்கைகளோடு, அந்த கிராம மக்களின் மறுவாழ்வுக்காகவும் அகரம்
அறக்கட்டளை களமிறங்கவுள்ளது.
கடந்த வாரங்களில் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னையை ஒட்டிய பல
மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடு, உடமைகளை இழந்து பலர் வீதிக்கு
வந்தனர். தொடர்ந்து தன்னார்வலர்கள் பலர் களத்தில் இறங்கி,
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தோடு அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான
உதவிகளை செய்து வருகின்றனர். இதில் பல நடிகர்களும் அடக்கம்.
தற்போது நடிகர் சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை சார்பாக, திருவள்ளூர்
மாவட்டத்தைச் சேர்ந்த 3 கிராமங்களை தத்தெடுக்கவுள்ளார். அவர்களின்
மறுவாழ்வுக்கு தேவையான பணிகளை அறக்கட்டளை செய்யவுள்ளது. இது தொடர்பாக அவர்
ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை:
"திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்வாய்,
கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கும்.
இருளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிவாசிகளுக்கு எவ்வித அடையாள அட்டையும் இல்லாததால் எவ்வித அரசாங்க
உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச்
செல்வதில்லை. அவர்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment