திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க வேண்டிய 60,000 லட்டுகளை கையாடல் செய்த தேவஸ்தான ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பணக்கார பக்தர்கள் அன்னதானம் திட்டத்திற்கு, மருத்துவ திட்டத்திற்கு என பல்வேறு திட்டங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை நன்கொடை செலுத்தி வருகின்றனர். அப்படி நன்கொடை செலுத்தும் நன்கொடையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக வருடத்திற்கு 3 முதல் 5 நாட்களுக்கு தங்கும் இடம், தரிசனம், லட்டு பிரசாதம் என தேவஸ்தானம் இலவசமாக வழங்கி வருகிறது.
அப்படி இலவச லட்டு வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்களை நிர்வகித்து வரும் பிரிவில் பணியாற்றிய தேவஸ்தான ஊழியர் வெங்கடரமணா, சுமார் 60,000 இலவச லட்டுக்களை நன்கொடையாளர்களுக்கு பிரசாதமாக வழங்காமல், அவற்றை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதிக விலைக்கு வெளிநபர்களுக்கு விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து, தேவஸ்தான உயரதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வெங்கடரமணாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்யும்படி உத்தரவிட்டுள்ள கோயில் நிர்வாகம், அவர் மீது வழக்குப் பதிவு செய்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment