மீண்டும் ஏமாற்றம்! ஆஸ்கர் போட்டியிலிருந்து ‘கோர்ட்’ வெளியேறியது!
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான இந்தியப் படமாக மராத்தி மொழித் திரைப்படமான கோர்ட், போட்டியில் கலந்துகொண்டது. ஆனால் அந்தப் படம் தற்போது அடுத்தச் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்களிலிருந்து, புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கிய கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு, ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான இந்தியப் படமாக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.
வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற கோர்ட் திரைப்படம், இதுவரை 19 தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, 16 விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்கர் ரேஸிலிருந்து கோர்ட் படம் வெளியேறியுள்ளது. அடுத்தச் சுற்றுக்கான 9 படங்களில் கோர்ட் படம் தேர்வாகவில்லை. The Brand New Testament (பெல்ஜியம்), Embrace of the Serpent (கொலம்பியா), A War (டென்மார்க்), The Fencer (ஃபின்லாந்து), Mustang (பிரான்சு), Labyrinth of Lies (ஜெர்மனி) Son of Saul (ஹங்கேரி), Viva (அயர்லாந்து) மற்றும் Theeb (ஜோர்டான்) ஆகிய 9 நாட்டுப் படங்கள் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன. இதிலிருந்து 5 படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் படங்கள் பற்றிய அறிவிப்பு, 2016, ஜனவரி 14-ம் தேதி அறிவிக்கப்படும். பிப்ரவரி 28-ம் தேதி அன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கர் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’ ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.
No comments:
Post a Comment