பீப் பாடல்: சிம்புவுக்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகக் கூறி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சிம்புவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டுள்ள இந்தச் சமயத்தில் இந்த ஆபாசப் பாடலை வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இதுகுறித்து கோவை மாநகர ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா அளித்த மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
சமீபத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் இணைந்து இசைக் கோப்பில் (மியூசிக் ஆல்பம்) பாடிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில், பெண்களை மிகவும் மோசமாக சித்திரித்துள்ளனர். அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில் இதுபோன்ற பாடல்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, இந்தப் பாடலை தடை செய்வதுடன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் சிம்பு, அனிருத் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிம்புவுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் டி.ஆரிடம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சிம்புவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment