எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்பது போல உள்ளது: விஜயகாந்த் கடும் கண்டனம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 16 December 2015

எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்பது போல உள்ளது: விஜயகாந்த் கடும் கண்டனம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், திடீரென செம்பரம்பாக்கம் ஏரி நீர்  திறப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பல விஷயங்களை மூடி மறைக்கிறது. பத்து நாட்களுக்குப் பிறகு 13 பக்க அறிக்கையை  தலைமைச்செயலாளர் கொடுத்துள்ளது “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை”  என்பதைப் போல உள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி  செயற்பொறியாளருக்கே முழு அதிகாரம் உள்ளது. முதல்வருக்கு எந்த தொடர்பும்  இல்லை என பொருள்படும்படி கூறியுள்ளார்.  ஆனால் ஜெயலலிதா முதல்வர் ஆனதிலிருந்து நேற்று முன்தினம் வரை, தமிழகத்தின் அனைத்து  அணைகள், ஏரிகளிலிருந்து  50 கனஅடி தண்ணீர்  திறந்துவிடுவது என்றால்கூட அவர்தான் உத்தரவிட்டுள்ளார் என்பதை வசதிக்கேற்ப மறந்து  விட்டாரா?.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைத்து, முதல்வரை காப்பாற்றும் வகையில்  வெளியிடப்பட்டுள்ள தலைமைச்  செயலாளரின் அறிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டு, பொதுப்பணித்துறையில் அவருக்கு கீழே  பணியாற்றும் அதிகாரிகள் மீது பழியைப்  போட்டு, இந்த பிரச்னையை திசை திருப்புவதற்காகவா?. இல்லை, மழை வெள்ள பாதிப்புகள்  சென்னையை மூழ்கடித்து நிர்மூலமாக்கிய போது, அதை  தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததற்காகவா?. சென்னையே வெள்ளத்தில் மூழ்கி மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து  நின்ற போது, நேரத்தை வீணடித்து, நீண்ட நெடிய அறிக்கை அளித்த பொதுப்பணித்துறை அமைச்சருக்கு, தனது கட்டுப்பாட்டில் வரும் செம்பரம்பாக்கம்  ஏரியின் நிலையை பற்றி மக்களிடம் விளக்கம்  அளிக்க நேரம் இல்லையா?.

இல்லை, முன்னாள் முதல்வரை, இந்நாள் முதல்வர் வாய் திறக்கச் சொல்லி அனுமதி  கொடுக்கவில்லையா?. இல்லை, இவரிடமிருந்த  பொதுப்பணித்துறை அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டதா?. பொதுப்பணித்துறைக்கு அமைச்சர்  மற்றும் துறை செயலாளர் இருக்கும் போது,  நடைமுறையில் இல்லாத வழக்கமாக தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டிய  அவசியம் ஏன் வந்தது?. யாரை காப்பாற்ற இந்த நாடகம்  நடக்கிறதென்பது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். “பொறுப்புள்ள மனிதரின்  தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”  என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் முதல்வர்  ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பொருத்தமாக உள்ளது.

இது நாள் வரையிலும் எல்லாவற்றிற்கும் நான்தான் என உரிமை கொண்டாடி பதிலளிக்கும் முதல்வர் ஜெயலலிதா, தற்போது  சென்னையில் ஏற்பட்ட  மழை வெள்ள பாதிப்புகளால், தான் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதை மனதில் கொண்டு, மக்களுக்கு பதில்  சொல்வதற்கு மட்டும்  அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்கிறார். அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது  புரிந்து கொள்ளுங்கள்.

பிரச்னை என்று வரும் போது அதிகாரிகள் மீது பழியை சுமத்திவிட்டு, தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல்  நடந்து கொள்வதும்,  அமைதியாக இருப்பதும் ஜெயலலிதாவிற்கே உரித்தான கலையாகும். தற்போது வாட்ஸ் அப் உரையாற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இனியும்  தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை.இவ்வாறு அறிக்கையில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages