அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment