சென்னையின் புது அடையாளமாக தன்னார்வலர்கள் மாறி இருக்கிறார்கள் என்று 'பசங்க 2' சந்திப்பில் சூர்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி
நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில்
தயாரித்திருக்கிறார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து
இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து
கொண்டார்கள்.
இதில் நடிகர் சூர்யா பேசியது:
"சென்னைக்கு எது அடையாளமாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒருவேளை
கடற்கரை, டிசம்பர் மாத நிகழ்ச்சிகள் என இருந்திருக்கலாம். இந்தியாவில் உள்ள
அனைவருமே திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னையின் சமீபத்திய வெள்ளம் ஓர்
அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.
ஒருவருக்கு கஷ்டம் என்றால் நாங்க இருக்கோம் என்று போர்க் குணத்தோடு வெளியே
வந்த தன்னார்வலர்களை நினைத்துப் பார்க்கிறேன். நிறையப் பேர்
தன்னார்வலர்களைப் பற்றி பேசிவிட்டார்கள். ஆனால் எனக்கு இது தான் முதல்
வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் கழுத்தளவு தண்ணீரில் கூட போய் பால் பாக்கெட் போட்ட
ராதா அம்மாவில் இருந்து, முகம்மது யூனுஸ் காப்பாற்றிய தம்பதியினருக்கு பெண்
குழந்தை பிறந்து அவர்களை அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டிருப்பது
வரை.. இவ்வாறு முகம் தெரியாத அத்தனை தன்னார்வலர் நாயகர்களுக்கு தலை
வணங்குகிறேன். இவர்கள் சென்னையின் புது அடையாளமாக ஆகிவிட்டார்கள். புதிய
அடையாளத்தை தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.
நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மும்பையில் ஒரு
நாள் என்ன சம்பவம் நடந்தாலும், அடுத்த நாள் மக்கள் அவர்கள் வேலைகளைப்
பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இத்தனை நாட்களாக வெள்ளத்தைப் பற்றி
பேசுவதா, இல்லையென்றால் 'பசங்க 2' பற்றி பேசுவதா என்று தெரியாமல் இருந்தது.
ஏனென்றால் இரண்டு வேலைகளும் ஒரே சமயத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தற்போது 'பசங்க 2' படத்தை டிசம்பர் 24ம் தேதி வெளியிட முடிவு
செய்திருக்கிறோம்.
2டி நிறுவனத்துக்கு முதல் அடையாளமாக இருக்க வேண்டிய படம் 'பசங்க 2' தான்.
கோவாவில் இருக்கும் போது எனக்கு வந்து கதை சொன்ன பாண்டிராஜ் சாருக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கதை சொன்ன உடனேயே இப்படத்தை பண்ண வேண்டும்
என்று முடிவு பண்ணிவிட்டேன். குழந்தைகள் படம், சமுதாயத்துக்கான படம்
போன்றவைகளில் ஏதாவது ஒன்று முதல் படமாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், அனைத்தும் சேர்ந்ததாக 'பசங்க 2' அமைந்திருக்கிறது. எப்படி
பாண்டிராஜ் சார் ஒரே படத்தில் அத்தனை விஷயங்களையும் இணைத்தார் என்று
தெரியவில்லை.
'பசங்க' என்று ஒரு படம் எடுத்துவிட்டு, மீண்டும் அதே குழந்தைகள் களத்தில்
வேறு ஒரு படம் பண்ணுவது இயக்குநர் பாண்டிராஜ் சாருக்கு தான் சவாலாக
இருந்திருக்கும். இரண்டு பேருமே சேர்ந்து தயாரித்து, வெளியிடலாம் என்று
சொன்னது பாண்டிராஜ் சாரின் பெருந்தன்மையைக் காட்டியது.
நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது, அப்பா, அம்மா நம்முடன் இல்லை என்று
கோபப்பட்டு இருக்கிறேன். ஆனால், இன்றைய குழந்தைகள் அப்படியில்லை.
குழந்தைகளோடு தற்போது நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வேலைகளில்
மும்முரமான அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அம்மாகளுக்குத் தான்
தெரியும். நாங்கள் சிறுவயதில் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவோம்,
நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். நிறைய நேரம் வீட்டுக்கு வெளியே இருப்போம்.
இப்போது அப்படியில்லை. வீட்டுக்குள் தான் அடைத்து வைத்துவிடுகிறோம்.
குழந்தைகளிடம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நிறைய விஷயங்கள்
எதிர்பார்க்கிறோம். இப்படி அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைந்து சொல்லும் ஒரு
படமாக 'பசங்க 2' படத்தைப் பார்க்கிறேன்.
நகரத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் மற்றும்
குழந்தைகளுடைய வாழ்க்கையை அவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்று
சொல்லியிருக்கிறோம். இப்படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள் புரிந்து
கொள்ளக்கூடிய விஷயங்கள் இதில் நிறைய இருக்கிறது. பாடம் எடுப்பது போல்
அல்லாமல், இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது, இப்படி இருக்கலாமே என்று
சொல்லும் படமாக 'பசங்க 2' படத்தைப் பார்க்கிறேன்.
இயக்குநர் பாண்டிராஜின் படங்களில் அவருடைய வசனங்கள் அவருக்கு பெரிய பலம்.
இந்த படத்திலும் அதே போன்று நிறைய வசனங்கள் இருக்கின்றன. "பசங்களின் மனதில்
மதிப்பெண்களை விட மதிப்பான எண்ணங்களை தான் விதைக்க வேண்டும்", "70 கிலோ
உருவம் 10 கிலோ உருவத்தை அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை!" என்பது
மாதிரியான நிறைய வசனங்கள் இப்படத்தில் இருக்கிறது" என்று பேசினார் சூர்யா.
No comments:
Post a Comment