கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை:தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் நடிகர் சரத்குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகக் குழுவின் 2-ஆவது செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டத்தில் 30 அம்சங்கள் குறித்து விவாதித்தோம். இதன் கீழ் ஒரு சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சுமார் 3,500 உறுப்பினர்களை கொண்ட சங்க உறுப்பினர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்க முதல்கட்டப் பணிகளைத் தொடங்க உள்ளோம்.
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் சரத்குமார் தலைமையிலான முந்தைய நிர்வாகம் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து கடந்த இரு மாதங்களாக விவாதித்து நடவடிக்கையைத் தொடங்கினோம். இது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சங்கத்துக்கென தனிக் கட்டடம் கட்டுவதற்காக, வரைவுத் திட்டம், நிதி திரட்டுவது குறித்து பேசி வருகிறோம். நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படம் குறித்தும் பேசி வருகிறோம்.
சரத்குமார் தலைமையிலான நிர்வாகக் குழு 2013-14, 2014-15-ஆம் ஆண்டுகளுக்கான கணக்குகளை இன்னும் தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளோம். இதற்கான பதில் எதுவும் வரவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் நிதிக்கு ரூ.1 கோடி: முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் அளித்த நன்கொடை மூலம் இதுவரை ரூ.1 கோடியே 3 லட்சம் சேர்ந்துள்ளது. அது விரைவில் வழங்கப்படும் என்றனர்.
பீப் பாடல் விவகாரம்: ராதிகாவுக்கு நோட்டீஸ்பீப் பாடல் குறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
நடிகர் சிம்புவின் "பீப் சாங்' எனப்படும் பாடல் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் அவர் பிரச்னையை சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்வதாக அறிவித்துள்ளதால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை.
இந்த விவகாரத்தில் நடிகை ராதிகா கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இதுகுறித்து அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment