மாலை நேரத்து மயக்கம் விமர்சனம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

மாலை நேரத்து மயக்கம் விமர்சனம்

நடமாடும் ‘மைண்டு’ வைத்தியராக இருந்து, தள்ளாடும் குடும்ப வாழ்க்கைக்கு புத்தி சொல்லியிருக்கிறார் செல்வராகவன்!

சினிமா துறைக்கு வராமல் ஒழுங்காக படித்திருந்தால், இந்நேரம் நகரத்தின் முக்கிய ‘சைக்காட்ரிக்’ மருத்துவராக இருந்திருப்பாரோ என்னவோ? நாற்பது வருஷமானாலும் புரிந்து கொள்ள முடியாத தியரியை நாலே நிமிஷத்தில் தீப்பிடித்த மாதிரி சொல்லியிருக்கும் சூடென்ன? சுவையென்ன? நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..... நாமெல்லாம் விரும்பிய அந்த பழைய செல்வராகவன் மீண்டும் கிடைச்சிட்டாருங்கோ...!

“நாட்ல நடக்கறதைதானே எடுத்துருக்காரு”ன்னு ஒரு குரூப்பும், “இப்படி எடுக்கறதாலதான் நடக்குது” என்று இன்னொரு குரூப்பும் கைகலப்பில் ஈடுபடக்கூடும். எப்படியிருந்தாலும் இந்த படம் அரெஞ்சுடு மேரேஜ் தம்பதிகளுக்கு ஆற வைத்து பதமாகக் கொடுத்த அறிவு ரசம்!

சற்றேயல்ல..., நல்ல துடிப்பான, அழகான, திமிரான மகள் காதல் தோல்வியில் வேதனைப்பட, பெற்ற அம்மாவுக்கு பற்றியெறியுது வயிறு. “சொல்றத கேளு. நல்ல பையனா நான் கட்டி வைக்கிறேன்” என்று அவளை ஒரு அப்பாவி பையனுக்கு கட்டி வைக்க, அம்பானி பேமிலியில அருக்காணி நுழைஞ்ச மாதிரி ஆகி விடுகிறார் ஹீரோ.  சாப்பிடுகிற ஃபுட்டிலிருந்து, கேட்கிற பாட்டு வரைக்கும் இருவரது டேஸ்ட்டும் நடுவே படு பாதாள கேப். அப்புறமென்ன...? முதலிரவிலேயே தனி அறைக்கு கிளம்பிவிடுகிறார் ஹீரோயின்.

தன் மனைவிக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ் என்பதை சற்று தாமதமாக அறியும் ஹீரோ, அவள் போக்கிலேயே போய் அவளை கவர ட்ரை பண்ணுகிறார். அதற்குள் இரண்டு வருஷம் அசால்ட்டாக ஓடிவிட, இனி கெஞ்சினால் ஆகாது என்ற முடிவுக்கு வரும் அவர், ஒரு நாள் இரவு அவள் மேல் பாய்ந்து பலாத்காரம் செய்ய... கிட்டதட்ட நடந்து முடிகிறது அந்த ரேப். நாய் முகத்துல முழிச்சாலும் முழிப்பேன். உன்னைய மாதிரி ஆய் முகத்துல முழிக்கவே மாட்டேன் என்று ஹீரோவை விட்டு விலகும் ஹீரோயின் டைவர்ஸ் வாங்கிக் கொள்ள, மீண்டும் வருகிறான் முதல் காதலன். யாரோடு யார் சேர்ந்தார்கள்? விறுவிறுப்பான, கலகலப்பான, படு சுவையான க்ளைமாக்ஸ். குடும்பத்தோடு போனால் லஜ்ஜையாகவும், தனித்தனியாக போனால் இச்சையாகவும் இருப்பது போல ஒரு படம். வாழ்க செல்வராகவன் அண்டு மிசஸ் செல்வராகவன். ஏனென்றால் கணவர் செல்வராகவனின் கதையை கருத்து சிதையாமல், கன்னம் வலிக்காமல் இயக்கித் தந்திருப்பது இவர்தானே!

இந்த படத்தின் முதல் வெற்றியே பாத்திரத் தேர்வுதான். திமிரையும் அழகையும் முகம் முழுக்க கொட்டி வைத்திருக்கும் கதாநாயகி வாமிகாவுக்கு அநேக நமஸ்காரங்கள். தனது கேரக்டர் என்ன என்பதை அப்படியே துல்லியமாக புரிந்து கொண்டு, நகைக்கடை தராசு போல மி.மீ தாண்டாமல் நடித்திருக்கிறார். தன் பழைய பாய் பிரண்டை பார்க்கும் போது அப்படியே காதலாகி கசிந்துருகும் அந்த முகத்திலா, அப்படியொரு ஆசிட் புகைச்சல் என்று ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல தன் கணவனின் மீது அவர் காதல் கொள்கிற காட்சியெல்லாம் திரை கொள்ளாத ரசனையாக வழிகிறது. ஒரு காட்சியில் கூட அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் மனசுக்குள் ஜிவென்கிறது அவர் வரும்போதெல்லாம்.

அதற்கப்புறம் ஹீரோ பாலகிருஷ்ண கோலா. பார்ஷ்ஷான பெண்ணை கட்டிக்கிட்டோம் என்கிற சந்தோஷம், சில நாட்களுக்குள்ளேயே வடிந்துவிட, அதற்கப்புறம் முன்பை விட இன்னும் டொய்ங் அடிக்கிறது அந்த முகத்தில். பொருத்தமாக ஒரு பொட்டிக்கண்ணாடி வேறு. நமக்கென்னவோ செல்வராகவனை பார்த்த மாதிரியே இருக்கிறது. மிக அநாயசமாக நடித்திருக்கிறார். பிரிந்து போன மனைவியை மீண்டும் சேர்த்துக் கொள்ள அவர் மொக்கையாக செய்யும் சில முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. பின் அதே பாலகிருஷ்ண கோலா க்ளைமாக்ஸ் நேரத்தில் சற்றே திமிருடன் நடந்து கொள்கையில் ரொம்பவே பிடித்துப் போகிறது.

பாலகிருஷ்ணாவின் அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், ஹீரோயின் அம்மா, “உன்ன மாதிரி பிகரெல்லாம் அவனுக்கு கிடைச்சா காலடியிலேயே கிடப்பான்” என்று அவர் சொல்லும் டயலாக், “வேற மாதிரி செக்ஸ் வச்சுக்க சொன்னானா?” என்ற திடுக் கேள்வி... இப்படி எதுவும் இந்த படத்தில் மறக்கலகாத விஷயங்கள்.

செல்வராகவனின் எள்ளல் வழியும் டயலாக்குகள் படம் முழுக்க. சில அவருக்கேயுரிய நான்வெஜ் டைப். சமயங்களில் மூக்கை பொத்திக் கொள்கிற அளவுக்கு கூட போயிருக்கிறது. இருந்தாலும் ஓரிடத்தில், ரெசிடென்ஸ் ஏரியான்னு சொன்னே? இங்கேயே நாலு டாஸ்மாக் இருக்குன்னு வேற சொல்ற? என்று எழுதியிருக்கிறார். கிரேட்!

அந்த இறுதிக்காட்சி... டிராஜடியில் முடியுமோ என்ற திகைப்பை தந்து காப்பாற்றியிருக்கிறார் டைரக்டர் கீதாஞ்சலி.

அம்ரித்தின் இசையில் சில பாடல்கள் கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ? பட் பின்னணி இசை அமோகம்! ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் அவருக்கு தேவையான அந்த மின்னொளி இருட்டும் ஒரு மாயத்தை ஏற்படுத்துகிறது.

ஆயிரம் பேர் வந்தாலும் போனாலும், செல்வராகவன் என்ற பிராண்ட் சேர்த்து வைத்திருப்பதெல்லாம் இந்த படம் போன்ற துணிச்சலைதான்! குடும்ப கோர்ட் பக்கமா திரியுற அத்தனை பேரும், ஒருமுறை இந்த படத்துக்கு போயிட்டு வாங்க. வாய்தாவையே பார்த்த உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்ற தெளிவு கிடைக்கக் கூடும்!

மாலை நேரத்து மகோன்னதம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages