தி எக்ஸார்சிஸ்ட் படம் 1973-ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுக்க பலத்த வரவேற்பைப் பெற்றது. அதன் இயக்குநர், வில்லியம் ஃபிரெட்கின்.
அவர் ட்விட்டர் தளத்தில், தி எக்ஸார்சிஸ்ட் வெளியாகி 42 ஆண்டுகள் ஆனதையொட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதற்கு இயக்குநர் செல்வராகவன், சார் நீங்கள் இதைப் படிப்பீர்களா என்று தெரியாது. ஆனால் உங்கள் படம் சினிமா உலகில் ஒரு கவிதை என்றால் மிகையில்லை. ஓர் அளவுகோல். நான் இந்தியாவைச் சேர்ந்த பட இயக்குநர். 10 படங்களை இயக்கியுள்ளேன். என்னைப் போன்று உங்களை வழிபடுபவர்கள் உலகில் எத்தனை பேர் என்பது கடவுளுக்கே தெரியும் என்று ட்வீட் செய்தார்.
எதிர்பாராதவிதமாக ஃபிரெட்கின் செல்வராகவனுக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்தார். உங்கள் ட்வீட்டைப் படித்தேன் செல்வா. நான் பெருமைப்படுகிறேன் என்றார். உடனே செல்வராகவன், என் வாழ்க்கையின் ஒரு லட்சியத்தை அடைந்துவிட்டேன் என்று அதற்குப் பதிலளித்தார். இத்துடன் உரையாடல் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஃபிரெட்கின் மேலும் தொடர்ந்தார்.
இயக்குநர்கள் என்கிற வகையில் நாம் அனைவரும் சமமே, உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நாம் சகோதர சகோதரிகளே என்றார். இதற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ட்வீட் செய்தார் செல்வராகவன். உங்களிடமிருந்து பதில் கிடைத்ததற்குப் பெருமைப்படுகிறேன். என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நன்றி - உங்களுடைய பெரிய ரசிகன் என்று பதிலளித்தார்.
உரையாடல் இத்துடனும் நிற்கவில்லை. நானும் அவ்வாறே உணர்கிறேன். நாம் தொடர்பில் இருக்கலாம் என்றார் ஃபிரெட்கின். இறுதியாக செல்வராகவன் பதிலளித்து உரையாடலை முடித்துக்கொண்டார். எல்லையில்லாத பெருமிதம். ஒரே வேண்டுகோள். எப்போது நேரம் கிடைத்தாலும் இந்தியாவுக்கு வருகை தரவேண்டும். என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களை உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment