பூலோகம் – திரை விமரிசனம்
பூலோகம் - இது ஆண்கள் உலகம் என்று ஒன் லைன் கொடுத்திருக்கலாம். அந்த அளவுக்கு படம் முழுக்க ஆண்கள் கூட்டம்.
ஃபார்ச்சூன் என்ற ஆங்கில பெயரில் தொடங்கப்பட்ட சானல் அது. சர்வதேசப் புகழ் என்பதே அதன் உரிமையாளர் தீபக்கின் (பிரகாஷ்ராஜ்) லட்சியம். குத்துச்சண்டை வீரரான தன் அப்பாவை தோற்கடித்தவனின் மகன் ஆறுமுகத்தைக் அதே போல குத்துச் சண்டை போட்டியில் வென்று அவனைக் கொல்வதையே லட்சியமாகக் கொண்டவன் பூலோகம் (ஜெயம் ரவி). அவனை உயிராய்க் காதலிக்கும் திரிஷா, இந்தப் பின்னனியில் ரவியின் மீது சூழப்பட்ட கார்ப்பரேட் வலை எனச் சுழலும் படம் பூலோகம். புலி வாலைப் பிடித்தவன் அதை விடுவது அத்தனை சுலபமல்ல. அது போலத் தான் ஒரு லட்சியத்தை தீவிரமாக தனக்கென கொண்டவன் அதை எட்டும் வரை ஒரு நொடி கூட ஓயமாட்டான். பரபரப்பான காட்சியமைப்பால் ஒவ்வொரு ப்ரேமிலும் அதைக் காட்சிப்படுத்தியுள்ளது இப்படத்தின் சிறப்பு.
இந்த பூமி யாருக்கு சொந்தம்? உழைப்பவனுக்குத் தான் என்பது விடையாகச் சொன்னாலும் உழைப்பவன் சுரண்டப்பட அவனை சுரண்டி வாழ்பவன் எப்போதும் பண பலம் படைத்தவனாக இருப்பது உலகம் எங்கும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இப்படி படத்தின் பெயரிலிருந்து சொல்ல வந்த கருத்துக்களை நயமாகச் சொன்னதற்கே முதலில் இந்த பூலோகத்தைப் பாராட்டலாம்.
படத்தின் முதல் பாதியில் பகை, பாக்ஸிங் போட்டி, அதன்பின் பூலோகத்தின் மனமாற்றம் என்று ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும், அலுப்பூட்டும் சில பன்ச் வசனங்களும், சொல்வதை திரும்பச் சொல்லுதல் போன்ற தொய்வுகளும் படத்தின் வேகத் தடையாக விளங்குகின்றன. திரிஷா ரவியை காதலிக்கும் பெண்ணாக முதல் பாதியிலும் அவரை ஊக்கப்படுத்தி பயிற்சியும் அளிக்கும் அன்பு மனைவியாக் இரண்டாம் பகுதியிலும் மிகையற்ற நடிப்பால் ஜொலிக்கிறா. திரிஷாவின் வெற்றிக்கான ரகசியம் வெட்கம் கலந்த அந்த மென் சிரிப்பும், மெல்லிய இடையும் என்றே சொல்லலாம். ஜெயம் ரவியைப் பற்றி சொல்லவே வேண்டாம். பேராண்மையில் ஆரம்பித்து தனி ஒருவன் படத்தின் மூலமாகவும் தமிழ்த்திரையில் தனக்கான இடத்தை வலுவாகப் பிடித்துள்ளார். எம் குமரன் படத்துக்குப் பிறகு பாக்ஸிங் நடிப்பில் அசல் பாக்ஸராகவே ஆக்ரோஷம் காட்டியுள்ளார். நடனமும் குரலும் அந்தளவு கைகொடுக்காவிட்டாலும் உக்கிரமான உடல்மொழியும், நடிப்பும் அவரை நன்றாகவே காப்பாற்றுகிறது.
இந்தப் படத்தில் கைத்தட்டல் வாங்குவது வசனங்கள். தன்னுடைய மாணவர் இயக்குநர் கல்யாணின் முதல் படத்துக்கு வசனம் எழுதியுள்ளவர் எஸ்.பி.ஜனநாதன். ஒன்றா ரெண்டா வில்லன்கள் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க எத்தனை வில்லன்களைத் தான் சமாளிப்பார் ரவி. முதலில் ஆறுமுகம், அதன்பின் துரியோதனனாக மகாபாரதத்தில் நடித்த அவர், அதன் பின் திரிஷா படிக்கும் கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் படிக்கும் ஒரு குட்டி வில்லன் (இறுதிக் காட்சியில் அவர் கைத்தட்டி தன் வில்லத்தனத்தை கைவிடுகிறார்), பிரகாஷ் ராஜின் நவீன அடியாளாக பாக்ஸிங் கோஆர்டினேட்டராக நடித்துள்ள இயக்குநர் ரவி மரியா, வெளிநாட்டு பாக்ஸர் (இவர் பிரபல குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான நாதன் ஜோன்ஸ்) என ஒரு வில்லப் பட்டாளத்தை களம் இறக்கியுள்ளார்கள். தவிர. பாக்ஸர்களின் மாஸ்டர்களான சண்முகராஜாவும், பொன்வண்ணன் (இவங்களும் ஆரம்பத்தில் வில்லன்கள் போல சித்தரிக்கப்பட்டாலும் கடைசியில் இல்லையென நிரூபிக்கிறார்கள்). எல்லாவற்றையும் விட பெரிய வில்லன் நம்முடைய பழி வாங்கும் உணர்வு என்பதை சொல்லாமல் நமக்கு உணர்த்துவதும்(!) சிறப்பு.
யார் செத்தால் எனக்கென்ன எனக்குத் தேவை விளம்பரங்கள், அதன் மூலம் கொட்டிக் குவியும் பணம், உலகின் பத்து பணக்காரர் வரிசையில் இடம் பெற எதுவும் செய்வேன் என்று வெளிப்படையாகவே சொல்லும் அக்மார்க் வில்லனாக வெகு நாட்களுக்குப் பின் வில்லத்தனத்தில் பின்னுகிறார் பிரகாஷ்ராஜ். சேனல் அதிபராக கார்ப்ரேட் உலகின் ஒட்டுமொத்த பிரநிதியாக அசத்தியுள்ளார். டி ஆர் பி ரேட்டிங் அதிகரிக்க நிஜக் கொலைகளை ஊக்கப்படுத்தும் சைலண்ட் தாதாவாக படம் முழுவதும் நிற்கிறார். வசன உச்சரிப்புக்களும், பார்வையாலும், முழியாலும் மிரட்டி இருக்கிறார்.. பாக்ஸிங் படம் என்றால் வன்முறை அதிகம் இருக்கத்தானே செய்யும்? ஜெயம் ரவி எதிரி வட நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, அடி பின்னி பெடல் எடுத்து நாக் அவுட் செய்துவிடுகிறார்.
இசை ஸ்ரீகாந்த் தேவா. பின்னனி இசை பல இடங்களில் விறுவிறுப்பாக இருந்தாலும் இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கானா பாடல்கள், ஒற்றை வரிப் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான்.
சீரியஸான படத்தில் காமெடி சில இடங்களில் இசைசெருகலாக இருந்தாலும் நையாண்டி வசனம் மூலம் அதை சமன் படுத்திவிடுகிறார் புது இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். இதுவரை வந்துள்ள பாக்ஸிங் படங்களிலிருந்து சற்று மாறுபட்ட சூழலில் கதை சொல்லியிருந்தாலும் பல இடங்களில் எதிர்ப்பார்க்கக்கூடிய காட்சிகளாகவே இருந்தன. ஆனாலும் நல்ல கதையை தேர்வு செய்து நூல் பிடித்தாற்போல் திரைக்கதையும், கச்சிதமான கதாபாத்திரங்களின் தேர்வும் இந்தப் படத்தின் தரத்திற்கு சான்றாகின்றன. தவிர பாக்ஸிங் காட்சிகளில் ரிசர்ச் நிறைய செய்துள்ளார்கள். ஜெயம் ரவி ஆக்ரோஷமான முகபாவங்களுடனும் உடற்பயிற்சிகளாலும் ஒரு குத்துச்சண்டை வீரராகவே உருமாறியிருந்தார்.
தாமதமாக வந்திருந்தாலும் நன்றாக வந்திருக்க வேண்டியவன். ஏனோ சில குறை நிறைகளுடன் லேசான தள்ளாட்டத்தில் நிற்கிறான் பூலோகம்.
No comments:
Post a Comment