மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளை மறுசீரமைக்க இதுவே சரியான தருணம் என்று மத்திய நிதியமைச்சரும், தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அதுதொடர்பாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாகவும், தணிக்கைக் குழுவின் செயல்பாடுகள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தணிக்கைக் குழுவின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறி அதன் தலைவராக இருந்த லீலா சாம்சன், தனது பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தார். அவருடன் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் சிலரும் பதவி விலகினர்.
இதைத் தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளர் பஹலாஜ் நிஹலானி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகும் பல்வேறு முரண்பாடுகளும், பிரச்னைகளும் திரைப்படத் தணிக்கைக் குழுவுக்குள் நீடித்து வருகின்றன.
குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் இடையேயான கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளைத் திருத்தியமைக்க வேண்டும் என்று ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ஜேட்லி திங்கள்கிழமை கூறுகையில், "மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பதை வரையறை செய்வது தொடர்பாக சில நிபுணர்களுடன் கலந்தாலோசித்துள்ளேன்' என்றார்.
No comments:
Post a Comment